search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை கல்லூரி மாணவி லோகேஸ்வரி"

    கோவையில் பேரிடர் ஒத்திகையின் போது மாணவியை தள்ளி கொன்றது தொடர்பாக போலீஸ் விசாரணை முடிந்து போலி பயிற்சியாளர் ஆறுமுகம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். #Logeshwari
    கோவை:

    கோவை நரசீபுரத்தில் உள்ள கலைமகள் கல்லூரியில் பேரிடர் ஒத்திகை பயிற்சியின் போது மாணவி லோகேஸ்வரியை கீழே தள்ளி கொன்ற பயிற்சியாளர் ஆறுமுகம்(வயது 31) என்பவரை ஆலாந்துறை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    ஆறுமுகம் தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சி பெறாமல், போலி சான்றிதழ் மற்றும் கடிதம் தயாரித்து 6 ஆண்டுகளுக்கு மேலாக கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி கொடுத்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரை காவலில் எடுத்து விசாரிக்க கோட்டில் மனுதாக்கல் செய்தனர். கடந்த 17-ந் தேதி முதல் 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டது. இதனையடுத்து ஆறுமுகத்தை சென்னை அழைத்து சென்று மாம்பாக்கத்தில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அங்கிருந்து ஏராளமான ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ஆறுமுகம் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய முத்திரைகளை பயன்படுத்தி சிவகாசியில் உள்ள அச்சகம் ஒன்றில் சான்றிதழ்களை அச்சடித்ததாக கூறினார்.

    இதனையடுத்து தனிப்படை போலீசார் சிவகாசிக்கு சென்று போலிசான்றிதழ்களை ஆறுமுகத்துக்கு அச்சடித்து கொடுத்த யோகானந்தம்(50) என்பவரை மடக்கிப்பிடித்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஆறுமுகம் போலி பயிற்சியாளர் என தெரியாமல் அவருக்கு சான்றிதழ்களை அச்சடித்து கொடுத்ததாக யோகானந்தம் கூறினார். பின்னர் தனிப்படை போலீசார் யோகானந்தத்தை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்தநிலையில் போலி பயிற்சியாளர் ஆறுமுகத்தின் 4 நாள் போலீஸ் காவல் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து போலீசார் அவரை அழைத்து வந்து 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கண்ணன் முன்னிலையில் ஆஜர் படுத்தினர். அவர் ஆறுமுகத்தை வருகிற 27-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் போலீசார் ஆறுமுகத்தை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.  #Logeshwari
    கோவையில் பேரிடர் ஒத்திகையின் போது மாணவியை தள்ளி கொன்ற பயிற்சியாளருக்கு போலி சான்றிதழ் அச்சடித்து கொடுத்த சிவகாசி அச்சக உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை நரசீபுரத்தில் உள்ள கலைமகள் கல்லூரியில் பேரிடர் ஒத்திகை பயிற்சியின் போது மாணவி லோகேஸ்வரியை கீழே தள்ளி கொன்ற பயிற்சியாளர் ஆறுமுகம்(வயது 31) கைது செய்யப்பட்டார்.

    அவர் தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சி பெறவில்லை என்பதும், போலியாக சான்றிதழ்களை தயாரித்து மாணவ, மாணவிகளுக்கு கொடுத்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து கடந்த 17-ந் தேதி முதல் ஆறுமுகத்தை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அவரை சென்னை அழைத்து சென்று மாம்பாக்கத்தில் உள்ள அவரது வீடு, அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அங்கி ருந்து ஏராளமான ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.

    தொடர்ந்து நடந்த விசாரணையில் ஆறுமுகம் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய முத்திரைகளை பயன்படுத்தி சிவகாசியில் உள்ள அச்சகம் ஒன்றில் சான்றிதழ்களை அச்சடித்தது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் சிவகாசிக்கு சென்று போலிசான்றிதழ்கள் அச்சடித்து கொடுத்ததாக யோகானந்தம்(50) என்பவரை மடக்கிப்பிடித்தனர்.

    ஆறுமுகம் போலி பயிற்சியாளர் என தெரியாமல் அவருக்கு சான்றிதழ்களை அச்சடித்து கொடுத்ததாக அவர் கூறினார். எனினும் அரசு முத்திரையுடன் கூடிய சான்றிதழ்களை அச்சடிப்பதற்கென்று சில விதிமுறைகள் உள்ளன. அவற்றை பின்பற்றாமல் யோகானந்தம், சான்றிதழ்களை ஆறுமுகத்துக்கு அச்சடித்து கொடுத்தது ஏன்? எவ்வளவு மாதங்களாக அச்சடித்து கொடுத்தார்? என விசாரணை நடந்து வருகிறது.

    ஆறுமுகத்தின் மோசடிகளுக்கு வேறு யாரும் உடந்தையாக இருந்தார்களா? என விசாரணை நடந்து வருகிறது. இதுதொடர்பாக அவரது கூட்டாளிகள் 5 பேர், தோழி ஒருவர் என பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆறுமுகத்துக்கு கோர்ட்டு அனுமதி வழங்கிய 4 நாள் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைகிறது. எனவே அவரை இன்று மாலை கோவை கோர்ட்டில் ஆஜர் படுத்த உள்ளனர். #Logeshwari
    கோவையில் பேரிடர் ஒத்திகையில் மாணவி பலியான வழக்கில் கைதான போலி பயிற்சியாளரை சென்னைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    கோவை:

    கோவை நரசீபுரத்தில் உள்ள கலைமகள் கல்லூரியில் பேரிடர் ஒத்திகையில் மாணவி லோகேஸ்வரி பலியான வழக்கில் பயிற்சியாளர் ஆறுமுகம் கைதானார்.

    அவரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு கோவை 6-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் கண்ணன், 4 நாட்கள் ஆறுமுகத்திடம் விசாரிக்க அனுமதி அளித்தார்.

    இதையடுத்து ஆறுமுகத்தை காவலில் எடுத்து விசாரித்தனர். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    எனது 15-வது வயதில் பெற்றோரை இழந்து விட்டேன். எம்.காம்., பி.எட் படித்துள்ளேன். கன்னியாகுமரியில் உள்ள தொண்டு நிறுவனத்தில் சிறு, சிறு வேலைகள் செய்து வந்தேன். பின்னர் வேலை தேடி 2011-ம் ஆண்டு சென்னை சென்றேன். அங்கு நண்பர் மூலமாக டிரஸ்ட் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு பேரிடர் ஒத்திகை பயிற்சிகளை கற்றுக் கொடுத்தனர்.

    2016-ம் ஆண்டு பேரிடர் பயிற்சி அளிக்கும் பயிற்சியாளராக முழுதகுதி பெற்றதாக கூறி எனக்கு மத்திய அரசின் சான்றிதழை அளித்தனர். பின்னர் டிரஸ்ட் மூலம் தமிழகம் முழுவதும் பல்வேறு பள்ளி, கல்லூரிகளுக்கு பேரிடர் ஒத்திகை பயிற்சி அளிக்க அனுப்பினர். கடந்த 2016-ம் ஆண்டு முதல் மாதம் ரூ.15 ஆயிரத்து 600 சம்பளம் தந்தனர். இதுவரை 1,467 கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளித்துள்ளேன்.

    கலைமகள் கல்லூரியில் பயிற்சியின் போது மாணவி லோகேஸ்வரி இறந்ததால், போலீசார் விசாரித்த போது நான் பயிற்சியாளர் என்பதற்கான சான்றிதழ்களை காட்டினேன். அப்போது தான் அவை போலியானது என எனக்கு தெரிய வந்தது.

    போலி சான்றிதழ்கள் தந்து என்னை இதுவரை ஏமாற்றி உள்ளனர். என்னை வேலைக்கு சேர்த்து விட்டவரை ஒரே ஒரு முறை மட்டும் பார்த்துள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ஆறுமுகம் வேலை பார்த்த டிரஸ்ட் குறித்து போலீசார் அவரிடம் துருவி, துருவி விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். அவர் கூறும் தகவல்களில் ஏராளமான முரண்பாடுகள் இருப்பதால் அவரை சென்னைக்கு அழைத்து சென்றனர்.

    இன்று சென்னை மாம்பாக்கத்தில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்த உள்ளனர். தொடர்ந்து அங்கு அவர் வேலை பார்த்ததாக கூறும் டிரஸ்ட்டுக்கு நேரில் அழைத்து சென்று விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    மாடியில் இருந்து தள்ளிவிட்டதில் கல்லூரி மாணவி இறந்த சம்பவத்தில் கைதான போலி பயிற்சியாளரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. #coimbatorestudentdied
    கோவை:

    கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே நரசீபுரம் விராலியூரில் உள்ள கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி நடத்தப்பட்டது. இந்த பயிற்சியின் போது 2-வது மாடியில் இருந்து கீழே விரிக்கப்பட்டு இருந்த வலையில் குதிக்க தயங்கிய மாணவி லோகேஸ்வரியை (வயது 19), பயிற்சியாளர் ஆறுமுகம் (31) பிடித்து தள்ளினார்.

    இதில் அவர் கீழே விழுந்தபோது முதலாவது மாடியில் உள்ள ‌ஷன் சேடில் தலை மோதியதில் படுகாயம் அடைந்ததால் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதுடன், ஆறுமுகம் மீது தெரிந்தே மரணம் ஏற்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    பின்னர் போலீசார் அவரை கோவை 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் ஆறுமுகம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அவர் போலி சான்றிதழ் பெற்று பேரிடர் மேலாண்மை பயிற்சியை நடத்தி வந்தது தெரியவந்தது.

    போலி பயிற்சியாளரான ஆறுமுகத்தை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர். இதற்காக கோவை 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனு மீதான விசாரணை நேற்று வந்தது. அப்போது போலீசார் ஆறுமுகத்தை பாதுகாப்புடன் அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு கண்ணன், ஆறுமுகத்தை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்ததுடன் வருகிற 20-ந் தேதி மாலை 5 மணிக்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

    இதனைதொடர்ந்து ஆலாந்துறை போலீசார் ஆறுமுகத்தை போலீஸ் பாதுகாப்புடன் ரகசிய இடத்தில் வைத்து போலி சான்றிதழ் தயாரித்தது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து போலீசார் கூறும்போது, ‘ஆறுமுகத்திடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #coimbatorestudentdied
    கல்லூரி மாணவி லோகேஸ்வரி இறந்த குடும்பத்துக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். #coimbatorestudentdeath

    கோவை:

    அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவை அருகே உள்ள நாதேகவுண்டன்புதூரை சேர்ந்த கல்லூரி மாணவி லோகேஸ்வரி இறந்த சம்பவம் எதிர்பாராத செயல். மிகவும் வருந்தத்தக்கது. டி.வி.க்களில் வெளியான வீடியோவை பார்க்கும் போது, அந்த கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் கலந்து கொண்ட லோகேஸ்வரி மாடியில் இருந்து கீழே குதிக்கவே தயங்குவது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. அவருக்கு கீழே குதிக்க விருப்பம் இல்லை. அதன் பின்னரும் பயிற்சியாளர், அந்த மாணவியை கட்டாயப்படுத்தி கீழே தள்ளிவிட்டு உள்ளார். இதனால் கீழே விழுந்த போது அந்த மாணவியின் தலையில் அடிபட்டதால் அவர் இறந்து உள்ளார். 

    இது போன்ற சம்பவம் எந்த கல்லூரியிலும் நடக்கக்கூடாது. நான் அந்த வீடியோவை பார்த்ததும், போலீசாரை தொடர்பு கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி அந்த பயிற்சியாளரை கைது செய்து உள்ளனர். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    அத்துடன் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இதுபோன்ற பயிற்சி நடத்தும்போது போதிய பாதுகாப்பு இல்லாமல் பயிற்சி நடத்தக்கூடாது. அதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்த பிறகு தான் பயிற்சியை நடத்த வேண்டும்.

    மேலும் அதில் பங்கேற்கும் மாணவ-மாணவிகளுக்கு விருப்பம் உள்ளதா? என்று கேட்டு, அவர்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே பயிற்சி கொடுக்க வேண்டும். கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி இறந்த சம்பவத்துக்கு தமிழக முதல்-அமைச்சர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளார். இந்த சம்பவத்தில் யார் தவறு செய்து இருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிவாரண தொகை ரூ.5 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் எஸ்.பி.வேலு மணி வழங்கினார். அவருடன் கலெக்டர் ஹரிஹரன், போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி ஆகியோரும் சென்று இருந்தனர். #coimbatorestudentdeath

    கோவையில் பேரிடர் பயிற்சியின்போது உயிரிழந்த மாணவி லோகேஸ்வரி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் வட்டம், வெள்ளிமலைப்பட்டிணம் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்த, ஆலாந்துறை கிராமத்தைச் சேர்ந்த நல்லாக்கவுண்டர் என்பவரின் மகள் செல்வி லோகேஸ்வரி என்பவர் 12.7.2018 அன்று கல்லூரியில், பயிற்சியின் போது, ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்து, மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

    இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த யோகேஸ்வரியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உரிய அனுமதி பெறாமல், கல்லூரி மாணாக்கர்களுக்கு முறையற்ற பயிற்சி அளித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல் துறை மற்றும் கல்லூரி கல்வி துறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.


    எனது உத்தரவின் பேரில், காவல் துறையினர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டதில், முறையற்ற பயிற்சி வழங்கிய திரு. ஆறுமுகம் என்பவர் நேற்றிரவே கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த செல்வி யோகேஸ்வரி குடும்பத்திற்கு ரூபாய் ஐந்து லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.  #CoimbatoreStudent #Logeshwari 
    முன்னேற்பாடு, உரிய பாதுகாப்பு இல்லாமல் பேரிடர் பயிற்சி அளிக்கப்பட்டது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் மற்றும் பயிற்சியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவியின் அண்ணன் தெரிவித்துள்ளார்.
    கோவை:

    பேரிடர் மேலாண்மை ஒத்திகையின் போது மாடியில் இருந்து விழுந்து இறந்த மாணவி லோகேஸ்வரி அண்ணன் செல்வகுமார் கண்ணீர் மல்க கூறியதாவது-

    எனது தங்கை மாடியில் இருந்து விழுந்தது குறித்து கல்லூரி நிர்வாகம் சார்பில் எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

    எனது தங்கையின் தோழி பவித்ராவின் தந்தை சக்திவேல் தான் எனது போனுக்கு தொடர்பு கொண்டு உங்கள் தங்கை மாடியில் இருந்து விழுந்து பலத்த காயத்துடன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

    நாங்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த போது எனது தங்கை இறந்து விட்டதாக கூறினார்கள்.

    இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் மற்றும் பயிற்சியாளர் மீது ஆலாந்துறை போலீசில் புகார் செய்து உள்ளோம். எனது தங்கை மரணத்துக்கு உண்மையான காரணம் தெரிய வேண்டும். இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம், பயிற்சியாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    முன்னேற்பாடு, உரிய பாதுகாப்பு இல்லாமல் பேரிடர் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இது போன்ற நிலை இனி யாருக்கும் வரக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாணவி லோகேஸ்வரி அவரது குடும்பத்தின் முதல் பட்டதாரி ஆவார். அவர் இறந்த சம்பவம் குடும்பத்தினர் மட்டுமின்றி ஆலாந்துறை பகுதியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மாணவி உடல் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டு இருந்த அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் சோகத்துடன் திரண்டு இருந்தனர். #CoimbatoreStudent #Logeshwari
    பேரிடர் ஒத்திகையில் மாணவி உயிரிழந்த சம்பவத்தில் கல்லூரி நிர்வாகம் கவனக்குறைவாக செயல்பட்டுள்ளதால் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உதயகுமார் கூறினார்.
    மேலூர்:

    கோவையில் நடந்த பேரிடர் ஒத்திகையின் போது கல்லூரி மாணவி லோகேஸ்வரி பலியானார்.

    இதுகுறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை மேலூர் அருகே பூஞ்சுத்தியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவையில் நடந்த பேரிடர் மேலாண்மை நிகழ்ச்சியின் போது கவனக் குறைவாகவும், விதிமுறைகளை பின்பற்றாததாலும் விபத்து ஏற்பட்டு கல்லூரி மாணவி உயிரிழந்துள்ளார்.

    அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களை வைத்துதான் இதுபோன்ற ஒத்திகைகளை மேற்கொள்ள வேண்டும். கல்லூரி நிர்வாகம் கவனக்குறைவாக இருந்துள்ளது. இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


    இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் மூலம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #CoimbatoreStudent #Logeshwari #Udhayakumar
    ×